Header Ads


இலங்கையில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா!




இலங்கையில் மார்ச் 13 வரை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று (14) மாலை நேரம் ஆகும் போது அந்த தொகையானது 10 ஆக அதிகரித்ததாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.


56 வயதான பெண்ணொருவரும், 17 வயதான இளம்பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

குறித்த பெண் இந்த மாதம் 7ஆம் திகதி இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே இவருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இலங்கையில் இதற்கு முன்னதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் ஒருவரின் உறவினரே 17 வயதான இளம்பெண் எனவும் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து வருகைத் தந்த நிலையில், பொலன்னறுவை - கந்தகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட ஒருவரே 8 ஆவதாக கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டவர் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் தற்போது பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 9 இலங்கையர்களும், 1 சீன பிரஜையும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வெளிநாட்டு பிரஜை பூரண குணமடைந்து சீனா நோக்கி பயணித்துள்ளார்.

எனினும், பாதிக்கப்பட்ட 9 இலங்கையர்களும் தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 103 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கொரோனா தொற்று காணப்படுவதாக சந்தேகிக்கப்படுபவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலைக்கு மேலதிகமாக, தேசிய வைத்தியசாலை, ராகமை, கராபிட்டிய, குருநாகல், கண்டி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், கம்பஹா, நீர்கொழும்பு, இரத்தினபுரி, பதுளை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கைக்கு விஜயம் செய்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக தமது நாட்டிற்கு செல்ல முயற்சித்த நான்கு போலாந்து நாட்டு பிரஜைகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையிலேயே அவர்கள், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய மறை மாவட்டங்களிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஆராதனைகளை ரத்து செய்யுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தவக்கால விசேட ஆராதனை நிகழ்வுகளை இடைநிறுத்துவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு நேற்று (14) முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கைதியொருவரை பார்வையிட மூன்று பேருக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (14) முதல் ஒருவர் மாத்திரமே கைதியொருவரை சென்று பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு உயிரியல் திணைக்களம் ஆகியவற்றிற்கு கீழுள்ள மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்களே இவ்வாறு மூடப்படுகின்றன.

கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சினிமா திரையரங்குகள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.

அதிகளவிலான கூட்ட நெரிசல் காணப்படும் பகுதிகளை மூடும் திட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற நிலையிலேயே இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

மக்கள் ஒன்று திரளும் வகையிலான பொது கூட்டங்களை நடத்த எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்குடன் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் ஒன்று கூடும் கூட்டங்களை நடத்த பொலிஸார் இதுவரை அனுமதி வழங்கி வந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு அந்த அனுமதியை வழங்க மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Powered by Blogger.