இந்தியாவில் 80 மாவட்டங்களை முடக்க அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசின் அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் ஆகியோர் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சுய ஊரடங்கு அழைப்புக்கு மக்கள் தாங்களாக முன்வந்து பெருமளவில் ஆதரவு அளித்ததாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் அப்போது தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியாக, அத்தியாவசியத் தேவை அல்லாத பயணிகள் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்குத் தடை உட்பட, பல்வேறு கட்டுப்பாடுகளை வரும் மார்ச் 31 வரையில் நீடிக்க வேண்டிய அவசர அவசியம் இருப்பதாக இந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட அல்லது அதுதொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்ட 80 மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் செயல்பாட்டுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை நீடித்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மத்திய அரசு முடக்க உத்தரவிட்ட 80 மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால் இந்த மூன்று மாவட்டங்களில் எவையெல்லாம் செயல்படலாம். எவையெல்லாம் செயல்படாது என்ற விவரத்தை தமிழக அரசு தனியாக அறிவிக்கும். அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படும்.
Post a Comment