Header Ads


இந்நாட்டின் 8 ஆவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டார்


இந்நாட்டின் 8 வது கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளி இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களில் ஒருவக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

42 வயதுடைய நபர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இன்றைய தினம் மொத்தமாக மூன்று பேருக்கு இதுவரை கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் மற்றும் நாத்தான்டிய பிரதேசத்தில் ஒருவரும் இதற்கு முன்னர் இனங்காணப்பட்டிருந்ததாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

அவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாத்தாண்டியை சேர்ந்த நபர் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்திற்குள் உள்வாங்கப்பட்டவர் அல்ல என்பதுடன், இவர் குருநாகல் வைத்தியசாவையில் சகிச்சை பெற்று வருகின்றார்.

இவர்களை நாம் கவனத்தில் கொள்ளும் போது இவர்களுள் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களாவர்.

இவர்களுள் நோய் தொற்றுக்கு உள்ளான ஒருவர் செங்கன் நாட்டில் இருந்து வந்தவராவார். இவர் ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விடயங்களில் மற்றுமொரு முக்கிய விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களினாலேயே இந்த நோய் உள்நாட்டுக்குள் பரவ ஆரம்பித்துள்ளது. இதனையே நாம் எதிர்பார்த்தோம் அதே இடம்பெற்றுள்ளது. இதனாலேயே இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து வருவோருக்காக இந்த தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தினோம்.

நாம் மேற்கொண்ட தீர்மானம் சரியானது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள முக்கிய 17 வைத்தியசாலைகளில் 103 கொரோனா தொற்று சந்தேகத்துக்கு இடமானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர் ஈரான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கலாக பல நாடுகளில் இருந்து வரும் விமானங்களை தடை செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது.

நோய் தொற்றுக்கு உள்ளான இத்தாலியில் இருந்து வந்த இருவர் மிலோன் விமான நிலையத்தில் இருந்து இலங்கை வர முடியாமல் அந்த நாட்டில் 800 மைல்களுக்கு அப்பால் சென்று விமானம் ஏறி இங்கு வந்துள்ளனர்.

இவர்கள் பரசிற்றமோல் குழிசைகளை பயன்படுத்தியுள்ளனர்; இவர்கள் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட 16 பேருடன் இருந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த 16 பேரையும் இராணுவத்தினர் தனிமைப்படுத்தியுள்ளனர் என்றும் வைத்தியர் அனில் ஜாசிங்க இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கொவிட் - 19 ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.
Powered by Blogger.